சென்னை :
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி நடைபெற்றது.
இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் டிசம்பர் 31-ந் தேதி பொறுப்பேற்றார்.
அதைத்தொடர்ந்து சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதனால் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை விட்டு விலகினார். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்கு சென்றதால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணி உருவானது.
இதனால் இரட்டை இலை சின்னம், கட்சி கொடி முடக்கப்பட்டது. இதன்பிறகு இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்தது. அதன்பிறகு 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது.
இந்த கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அத்துடன் சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரது நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
மறைந்த ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமாக வழங்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னம், கட்சி கொடி மீட்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சியில் பலர் நீக்கம், கஜா புயல் காரணங்களால் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க. சார்பில் தகவல் தெரிவித்து கால அவகாசம் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வாகனகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது.
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைந்த பிறகு நடைபெறும் 2-வது பொதுக்குழு இதுவாகும். முதலில் நாளை செயற்குழு கூடுகிறது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 380-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள்.
அதன்பிறகு பொதுக்குழு நடைபெறும். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி. தினகரனின் கட்சிக்கு சென்றவர்களில் பலர் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வந்துள்ளதால், அவர்களுக்கு உரிய பதவி வழங்குவது, கட்சிக்கு அமைப்பு ரீதியாக தேர்தல்களை நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொருவருக்கும் அழைப்பிதழ் தனித்தனியாக தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்களை மட்டும் பொதுக்குழுவில் அனுமதிக்க வேண்டும் என்று கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது.