மானிய சிலிண்டர் விலை கடும் உயர்வு திரும்ப பெற வேண்டும் என
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பெட்ரோல் , டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. வீட்டு உபயோகத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் விற்கப்பட்டு வருகின்றன. 12 சிலிண்டருக்கு மேல் சந்தை விலையில் வாங்க வேண்டும். ஆனால் மானிய சிலிண்டர் விலை எவ்வளவு என்பதை எண்ணெய் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. வீட்டுக்கு பில் வரும் போது தான் இதை அறிந்து கொள்ள முடிகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் மானியமில்லாத சிலிண்டரின் விலையில் ரூ.20 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து தொடர்ந்து 6 மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்துள்ளது. இதில் நேற்று முன் தினம் உயர்த்தப்பட்டது தான் அதிக பட்ச விலை உயர்வு. அதாவது 5 மாதங்களாக சென்னையில் மொத்தம் ரூ.143.50 உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் நடப்பு மாத விலை ரூ.147 அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோக 14.2 கிலோ சிலிண்டரின் விலை நடப்பு மாதத்துக்குபுதுடெல்லியில் ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆகவும்,சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும்,கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 ஆகவும்,மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஓட்டல் , டீக்கடைகளில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு மானியம் கிடையாது. சென்னையில் இந்த சிலிண்டர் விலை ரூ.226.50 உயர்த்தப்பட்டு ரூ.1589.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வர்த்தக சிலிண்டர் ரூ.1466 ஆக உள்ளது. இது கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்து விட்டது.
அரசின் புள்ளி விபரங்களின் படி சுமார் 11 கோடி பேர் மானியமில்லாத சிலிண்டர்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் மானியமில்லாத சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 55 டாலருக்கு சரிந்து விட்ட நிலையிலும் பெட்ரோல் டீசல் மானியமில்லாத சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது கண்டனத்துக்குரியது.ஏற்கனவே அத்தியவாசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் கடும் இன்னலுக்குஆளாகி வரும் நிலையில் மீண்டும் மீண்டும் மானிய சிலிண்டர் விலை உயர்த்தி அதன் மூலம் மக்களின் தலையில் விலை சுமையை ஏற்றுவது என்பது ஏற்று கொள்ள முடியாது. ஆகவே உயர்த்தப்பட்ட மானிய சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.